அதிக விலை கொடுக்கப் போகிறோம்: ராகுல் எச்சரிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இந்தியா அதிக விலை கொடுக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 151ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னும் வேகத்துடன் செயல்படவில்லை என காங்., எம்.பி., குற்றம் சாட்டி உள்ளார்.



இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரஸ் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள, உடனடியான அதிரடி நடவடிக்கைகள் தேவை. இந்த விவகாரத்தில், தீர்க்கமாக செயல்பட, மத்திய அரசு தவறியதற்கு, நம் நாடு, மிக அதிக விலை கொடுக்கப் போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா பிரச்னைக்கு இந்தியா சரியான நடவடிக்கையை எடுக்காவிட்டால் இந்தியப் பொருளாதாரம் அழிந்துவிடும் என ராகுல் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.