ஒமர் அப்துல்லாவை விடுவிப்பது எப்போது? சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி : 'ஜம்மு - காஷ்மீரில், முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லாவை விடுவிப்பது பற்றி, அடுத்த வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும்' என, யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 5ல், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு முதல் நாள், முன்னாள் முதல்வர்களும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களுமான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெஹபூபா முப்தி உட்பட, 400க்கும் அதிகமான அரசியல் தலைவர்கள், பிரிவினைவாத தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதன் பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டது.

ஜம்மு - காஷ்மீரில் நிலைமை சீராகி வரும் நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தலைவர்கள், விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பரூக் அப்துல்லா, கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், ஒமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அவரது சகோதரி, சாரா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''இந்த மனு மீது, உடனே விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:'கொரோனா' வைரஸ் பரவலால், இப்போது, உச்ச நீதிமன்றத்தில் ஆறு அமர்வுகள் மட்டுமே, செயல்பட்டு வருகின்றன. இந்த மனு மீதான விசாரணை, அடுத்து எப்போது வரும் என, சொல்ல முடியாது.