தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலையை ஒழிக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று ’பெண்கள் பாதுகாப்பு தினமாக’ தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சரி ஜெயலலிதாவின் கனவுதிட்டமான இத்திட்டத்தின் இன்றைய நிலை என்பதை விரிவாக பேசுகிறது இந்தக் கட்டுரை.
நோக்கம் நிறைவேறியதா?
இந்த தொட்டில் குழந்தை திட்டத்தின் விளைவாக 2001ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தை என்று இருந்த குழந்தை பாலின விகிதம் 2011ஆம் ஆண்டில் 943ஆக உயர்ந்துள்ளது என்கிறது அரசு தகவல்.
ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஆனால் தற்போது அந்த திட்டம் செயல்பட்டு வருகிறதா என்பது சந்தேகமாகவே உள்ளது என்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

"சேலம் மாவட்டத்தில் 2001-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி குழந்தை பாலின விகிதம் (1000 ஆண் குழந்தைகளுக்கு) 851 ஆக இருந்தது. அது 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது 917 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், மதுரை மாவட்டத்தில் 926-ல் இருந்து 939 ஆகவும், தேனி மாவட்டத்தில் 891-ல் இருந்து 937 ஆகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 930-ல் இருந்து 942 ஆகவும், தருமபுரி மாவட்டத்தில் 826-ல் இருந்து 911 ஆகவும் அதிகரித்துள்ளது," இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு சொன்ன தகவல்.
கடந்த வருடம், குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக பணியாற்றி வரும் சமக்கல்வி இயக்கம் என்னும் அமைப்பு தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் நடத்திய ஆய்வில், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மிக குறைந்த குழந்தை பாலின விகிதம் இருப்பதாக தெரியவந்தது.
அந்த ஆய்வில், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் முறையே குழந்தை பாலின விகிதம் 888 மற்றும் 884ஆக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த இருமாவட்டங்களுமே தொட்டில் குழந்தை நடைமுறையில் உள்ள மாவட்டங்களாகும்.
மாநிலத்தின் குழந்தை பாலின விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது பெண் சிசுக்கொலைகளை தடுத்துள்ளது ஆனால் கருக்கொலைகளை தடுக்கவில்லை என்றே நாம் கூறலாம் என்கிறார் அவர்."இந்த திட்டம் தொடக்கத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலங்களில் எத்தனை குழந்தைகள் தொட்டிலில் வந்தது எத்தனை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டன என்பதற்கான எண்ணிக்கையில் பொருத்தம் இல்லை," என்கிறார் தமிழ்நாடு குழந்தை உரிமை கண்காணிப்பகத்தின் ஆண்ட்ரூ.
பெண்கள் பாதுகாப்பு மட்டுமல்ல இந்த திட்டத்தினால் சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டாலும், கருக்கொலைகள் அதிகரித்துள்ளது என்கிறார்கள் ஆர்வலர்கள்.